செய்திகள்
நடிகை குஷ்பு நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்த படம்.

ஆயிரம் விளக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மோடி கையில் சமர்ப்பிப்பேன்- குஷ்பு பேட்டி

Published On 2021-03-14 20:28 GMT   |   Update On 2021-03-14 20:28 GMT
ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமர் மோடி கைகளில் சமர்ப்பிப்பேன் என்று அந்த தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு கூறி உள்ளார்.
சென்னை:

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள பா.ஜனதா தேர்தல் அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த பா.ஜனதா டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்று, அதனை பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து இந்த வெற்றியை அவர்களது கைகளில் சமர்ப்பிப்பேன்.அதே நேரத்தில், மாநில தலைவர் எல்.முருகனின் உதவியும் பெரிய அளவில் இருந்தது. அவருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘வாஷிங்மிஷின்' உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்பு தான் முக்கியம். ஏழை மக்களுக்கு நல்லது செய்வதில் எந்த தவறும் கிடையாது. அதற்காகத்தான் அரசாங்கம் இருக்கிறது.

நான் பா.ஜனதாவை நம்பித்தான் களம் இறங்கி இருக்கிறேன். என்னுடைய முகமதிப்பு பா.ஜனதாவுக்கு உதவினால் மகிழ்ச்சி அடைவேன். நிச்சயமாக பொதுமக்கள் வாக்களிக்கும் போது, எனது முகம் மட்டும் அல்ல அதற்கு பின்னால் தாமரையும் இருக்கும் அதைப் பார்த்து தான் மக்கள் வாக்களிப்பார்கள். நாளை (இன்று) முதல் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் 2 கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது. தி.மு.க..தலைவர் காங்கிரசை பார்த்து கட்சி தலைவர்களின் மகன்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூற முடியாது. காரணம் அவர் (மு.க.ஸ்டாலின்) மகனையும் அரசியலில் இறக்கி விட்டு உள்ளார். எனக்கு பின்னால் கட்சியும், கட்சி தொண்டர்களும் இருக்கிறார்களே தவிர எனக்கு பின்னால் என் குடும்ப உறுப்பினர்கள் இல்லை. தேர்தலுக்கு எனது சொந்த பணத்தை செலவு செய்வேன். எனக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் அவரும் முன்னால் வரப்போவது இல்லை. எங்களிடம் குடும்ப அரசியல் இல்லை.

வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உத்தேசித்து உள்ளேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள மக்களிடம், பா.ஜனதாவுக்கு வாக்களித்தால் உங்கள் வாழ்வு நலமாகும் என்று கூறி வாக்கு சேகரிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News