செய்திகள்
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்
கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடலூர்:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் (படிவம்-6) தனிப்பட்ட தொலைபேசி எண் (Unique Mobile No) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) NVSP (https://www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக நேற்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட சுமார் 800 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் புதிய வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குரிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை (e-EPIC) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொண்டனர். மேலும் வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்றும் சரிபார்த்துக்கொண்டனர்.
அதுபோல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் உரிய ஆவணங்களை கொடுத்தனர். இம்முகாம் நடைபெற்றதை அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடலூரில் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த முகாமில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பலராமன் கலந்து கொண்டு மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்கினார்.