செய்திகள்
வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்கு சீல்
வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூரில் பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வேலூர் மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் சென்றது. அவரது உத்தரவின் பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் பாலு, சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று மண்டித்தெரு, சுண்ணாம்புக்கார தெரு போன்ற இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு சுமார் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.