செய்திகள்
9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி நடந்த போது எடுத்த படம்.

சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு - கலெக்டர் ஆய்வு

Published On 2021-03-11 18:10 GMT   |   Update On 2021-03-11 18:10 GMT
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் பங்கீடு செய்யப்பட்டது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 5,177 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,820 கட்டுப்பாட்டு கருவிகள், 4,027 வி.வி.பேட் கருவிகள் விருத்தாசலம் தமிழ்நாடு அரசு பண்டகசாலை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் பங்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு பங்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.

விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார்கள் சிவக்குமார், ரவிச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார்கள் விருத்தாசலம் வேல்முருகன், வேப்பூர் கோவிந்தன், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசீலன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் வருகை தந்த தேர்தல் பொறுப்பாளர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த பணியை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News