செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Published On 2021-03-11 14:32 GMT   |   Update On 2021-03-11 14:32 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழப்பழுவூர்:

அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென அரியலூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பயண அட்டையை உடனே வழங்க வேண்டும். பழிவாங்கும் வகையில் ஒரு மாணவனை பருவ தேர்வு எழுத அனுமதிக்காத கல்லூரி முதல்வரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கல்லூரியில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும், மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்களது கோரிக்கைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News