செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவு

Published On 2021-03-09 07:20 GMT   |   Update On 2021-03-09 07:20 GMT
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்து உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் படி சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முககவசம் அணிவது, கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தொற்று பரவலை தடுக்க 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டது. தற்போது 868 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வாக்காளர் ஓட்டு போடுவதற்கு முன்பு கையுறை வழங்கப்படுகிறது. இதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். நீலகிரியில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது,நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்பட 15 மையங்கள், 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு(6 ஆயிரத்து 300 பேர்) தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு இருப்பு இருக்கிறது என்றனர்.
Tags:    

Similar News