செய்திகள்
நீலகிரி-கேரள எல்லையான நாடுகாணியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது எடுத்தபடம்.

தமிழகத்துக்கு வர இ-பாஸ் கட்டாயம்: நீலகிரி-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

Published On 2021-03-09 11:02 IST   |   Update On 2021-03-09 11:02:00 IST
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்.
கூடலூர்:

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனாவின் 2-வது அலை தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையொட்டி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர்த்து கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் என்ற புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் நீலகிரியில் உள்ள கேரள எல்லையான நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், சுகாதாரத்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது தவிர கொரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளார்களா? என்ற சோதனையும் நடத்தி செய்து வருகின்றனர். அவ்வாறு இ-பாஸ் மற்றும் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் வந்த வழியாக திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கு இ-பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தற்போது கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் வீண் சிரமத்தை தவிர்க்க, இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News