செய்திகள்
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

குரங்கு காய்ச்சல் பரவலை தடுக்க 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- கலெக்டர் தகவல்

Published On 2021-03-09 04:13 GMT   |   Update On 2021-03-09 04:13 GMT
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறவர்களுக்கு இ-பதிவு முறை தொடர்கிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். தற்போது இ-பதிவு நடைமுறையில் உள்ளது.

அதில் தங்களது விவரங்களை பதிவு செய்து, அனுமதி பெற்றுக்கொள்ளலாம். அதே நடைமுறை தொடரும். இ-பதிவில் தங்களது மாவட்டம், மாநிலம், ஆதார் அடையாள அட்டை எண், எதற்காக வருகிறீர்கள்? போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இ-பதிவு எடுக்காமல் வருகிறவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் பழங்குடியினர்கள், எல்லைகளில் வசிப்பவர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நடப்பாண்டிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News