செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2021-03-07 22:02 IST   |   Update On 2021-03-07 22:02:00 IST
ஊட்டி, குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கொரோனா பாதிப்பு காரணமாக ஆயிரத்து 50-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து, துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரியில் தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாக்குச்சாவடிகளை அந்தந்த தொகுதிக்குட்பட்ட வருவாய்த்துறையினர் சென்று பார்வையிட்டு தேர்தல் பணிக்காக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து உள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித தெரசன்னை தொடக்கப்பள்ளி, ஸ்ரீ ஓம் பிரகாஷ் தொடக்கப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளி, பாலகொலா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கன்னேரிமந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி, தேவர்சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் துணை வாக்குச்சாவடிகளில் கழிப்பிடம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லும் வழி, வாக்குப்பதிவுக்கு பின்பு வெளியேறும் வழியை பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, வெலிங்டன் பாளைய வாரிய உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. அனைவரும் வாக்களிக்கும் பொருட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், குந்தா தாசில்தார் மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News