செய்திகள்
கைது

காரைக்காலில் இருந்து மதுபானம்-சாராயம் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-03-06 15:55 GMT   |   Update On 2021-03-06 15:55 GMT
காரைக்காலில் இருந்து மதுபானம்-சாராயம் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்:

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பரிசு பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் ஆகியவை எடுத்து செல்வதை தடுக்க காரைக்கால் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகார்க்காபட், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் சோழன்குறிச்சி கிராமத்தில், திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மூட்டையில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கூத்தானூரை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது25) என்பதும், தேர்தலையொட்டி, காரைக்காலில் குறைந்த விலையில் மதுவை வாங்கி, தமிழக பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள்-சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல காரைக்கால் பஸ் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த குமுதவள்ளி (50) என்பவர், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை, பஸ்சில் கடத்துவதற்காக, ஒரு பையில் வைத்துக்கொண்டு பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காரைக்கால் நகர போலீசார் குமுதவள்ளியை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News