செய்திகள்
மஞ்சூர்-கெத்தை சாலையில் நிற்கும் காட்டு யானைகளை காணலாம்

மஞ்சூர்-கெத்தை சாலையில் தனியார் பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

Published On 2021-03-05 09:18 GMT   |   Update On 2021-03-05 09:18 GMT
மஞ்சூர்-கெத்தை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூர்:

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அடிக்கடி மஞ்சூர்-கோவை சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.

இதுவரை 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காட்டெருமைகள் தாக்கியுள்ளதால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லுபவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மஞ்சூரில் இருந்து கோவைக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் மஞ்சூர்-கெத்தை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் தனியார் பஸ்சை மறித்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை பின்நோக்கி இயக்கினார். தொடர்ந்து யானைகள் சாலையை மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும், சத்தம் போட்டு காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றனர். இதனால் மஞ்சூர்-கெத்தை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News