செய்திகள்
நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

நாகை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நகராட்சி ஆணையர் நடவடிக்கை

Published On 2021-03-04 20:04 IST   |   Update On 2021-03-04 20:04:00 IST
நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், பொறியாளர் வசந்தன் மற்றும் அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் சென்று ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாகை புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள் உள்ளன. இதில் பல கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்திருந்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், பொறியாளர் வசந்தன் மற்றும் அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது நகராட்சி ஆணையர், கடைக்காரர்களிடம் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால், நகராட்சி பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறினார்.

அதற்கு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது என கூறியதால், இருதரப்பினர் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நகராட்சி ஆணையர் கூறுகையில், ‘கடைகள் வைக்க நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் கடைகள் செயல்பட வேண்டும். பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடைபாதைகளை ஆக்கிரமிக்க கூடாது. அவ்வாறு செயல்படும் கடைகள் அகற்றப்படும்.

நகராட்சி சார்பில் ஒதுக்கிய இடத்தில் கடைகள் வைத்துக்கொள்ளவே நகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறது. அதிலும் நிறைய கடைகள் வரி செலுத்தாமல் நிலுவை தொகை வைத்துள்ளனர். எனவே நிலுகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்றார்.

அதன்பின்னர் கடையின் உரிமையாளர்கள் தாங்களாவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். தொடர்ந்து நடத்திய ஆய்வில் உரிமம் புதுப்பிக்காமல் உள்ள கடையின் உரிமத்தை உடனடியாக புதுப்பிக்கவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

Similar News