செய்திகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததை காணலாம்

ஊட்டிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Published On 2021-03-04 10:33 GMT   |   Update On 2021-03-04 10:33 GMT
கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதால் ஊட்டிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
ஊட்டி:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக அனைத்து சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதற்கிடையே மாவட்ட எல்லையை யொட்டி உள்ள கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அப்போதுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையென்றால் மாவட்ட எல்லையில் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர். இதனால் பூங்காவின் புல்வெளி பகுதிகள், கண்ணாடி மாளிகை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.வழக்கமாக புல்வெளிகளில் அமர்ந்து ஓய்வு எடுப்பார்கள். நேற்று சுற்றுலா பயணிகள் இன்றி காட்சி அளித்தது.

கடந்த 28-ந் தேதி தாவரவியல் பூங்காவுக்கு 4,839 பேர், 1-ந் தேதி 2,587 பேர், நேற்று முன்தினம் 1,981 பேர் வருகை தந்தனர். கடந்த 21-ந் தேதி 11,482 பேர் வந்தனர்.கொரோனா சான்றிதழ் கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பாதியாக குறைந்து உள்ளது. அதேபோல் ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
Tags:    

Similar News