செய்திகள்
பூங்காவில் மலர் நாற்றுக்களை நடவு செய்யும் ஊழியர்களை காணலாம்

குன்னூர் காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம்

Published On 2021-03-03 10:34 GMT   |   Update On 2021-03-03 10:34 GMT
சீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்களை அதிக அளவு கொண்டுள்ளதால் மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள்.

குறிப்பாக முதல் சீசன் என்று அழைக்கப்படும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும். இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

முதல் சீசனை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள பூங்காகளில் முதல் சீசனுக்காக புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. சீசன் சமயத்தில் இந்த மலர் நாற்றுக்கவில் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்ணை கவரும் வகையில் பூத்துகுலுங்கும்.

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இயற்கை சூழலில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் தொடங்குகிறது. இதனால் பூங்காவில் புதிய மலர் நாற்றுக்களை நடவு செய்ய நிலம் தயார் செய்யப்பட்டது. இதன்படி 1 லட்சத்து 50 ஆயிரம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் சால்வியா, டேலியா, மெரிகோல்ட், வில்லியம் உள்பட 30 வகையான மலர் நாற்றுக்கள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி மலர் விதைகளும் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
Tags:    

Similar News