செய்திகள்
ஊட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை காணலாம்.

ஊட்டியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பரிசு பொருட்கள் பறிமுதல்

Published On 2021-03-02 10:32 GMT   |   Update On 2021-03-02 10:32 GMT
ஊட்டியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பரிசு பொருட்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். வாகனங்களில் சோதனை செய்யும்போது அந்த காட்சி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் அ.தி.மு.க. படம் பொறித்த துணிப்பைகள் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த 400 துணிப்பைகளை பறிமுதல் செய்தனர்.

அதுபோன்று ஊட்டியில் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அ.தி.மு.க. பிரமுகரின் வாகனம் வந்தது. அந்த வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, நிற்காமல் சென்றது.

உடனே அதை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் தொட்டப்பெட்டா பகுதியில் அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தி அதற்குள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்துக்குள் 437 வேட்டி-சேலைகள் மற்றும் சில்வர் தட்டுகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் இருந்தன. உடனே அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

இது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் கூறும்போது, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக எடுத்துச்செல்லக்கூடாது. எந்த பொருட்களையும் கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News