செய்திகள்
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய ஏற்பாடு

Published On 2021-02-27 10:18 GMT   |   Update On 2021-02-27 10:18 GMT
நீலகிரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை பிரிப்பது, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது ஆகிய பணிகள் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 171 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது 868 வாக்குச்சாவடிகளாக உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் இன்னும் பல பள்ளிகள் திறக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளில் தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்து, அதனை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, அதன் அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக கிருமிநாசினி வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நபர் நியமிக்கப்படுகிறார்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முதலில் 7 மேஜைகள் போடுவதற்கு வழிவகை இருந்தது.

தற்போது இடவசதி இருந்தால் 14 மேஜைகள் போட்டுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக மேஜைகள் அமைக்க ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News