செய்திகள்
கொரோனா வைரஸ்

நீலகிரியில் கொரோனா சான்று இல்லாமல் வரும் கேரளா சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

Published On 2021-02-26 10:57 GMT   |   Update On 2021-02-26 10:57 GMT
கொரோனா இல்லை சான்றிதழ் மற்றும் இ-பதிவு செய்திருந்தால் அவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து கொண்டு நீலகிரிக்குள் அனுமதிக்கின்றனர். அப்படி எந்தவித ஆவணமும் இல்லாமல் வருபவர்களின் வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

ஊட்டி:

கொரோனா தொற்று குறைவு மற்றும் தளர்வுகள் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியது.அதன்படி கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றுடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்தார்.

இதையடுத்து தமிழக- கேரளா எல்லையான நாடுகாணி, தாளூர், பாட்ட வயல், சோலாடி, தமிழக- கர்நாடகா எல்லையான கக்கநல்லா உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கொரோனா மையம் அமைத்துள்ளனர்.

கேரளா, கர்நாடாகவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அதில் உள்ளவர்களிடம் இ-பதிவு செய்துள்ளீர்களா? கொரோனா இல்லை சான்று வைத்திருக்கிறீர்களா? என ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொரோனா இல்லை சான்றிதழ் மற்றும் இ-பதிவு செய்திருந்தால் அவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து கொண்டு நீலகிரிக்குள் அனுமதிக்கின்றனர். அப்படி எந்தவித ஆவணமும் இல்லாமல் வருபவர்களின் வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளில் கூறுகையில், நீலகிரியை இருப்பிடமாக கொண்டவர்கள், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வருபவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று பரிசோதனை சான்று பெறாமல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News