செய்திகள்
ஊட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மூடப்பட்டுள்ளதை காணலாம்.

ஆசிரியர் தம்பதிக்கு தொற்று- ஊட்டியில் 2 பள்ளிகள் மூடல்

Published On 2021-02-24 10:40 GMT   |   Update On 2021-02-24 10:40 GMT
ஆசிரியர் தம்பதிக்கு தொற்று உறுதியானதால், ஊட்டியில் 2 பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஊட்டி:

ஊரடங்கு தளர்த்தப்பட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நீலகிரி மாவட்டத்தில் 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவரது மனைவி மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவருக்கும் பரிசோதனை செய்ததில் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து 2 பேரும் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தியதால் சக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.தொடர்ந்து சுகாதாரத்துறையினர் 2 பள்ளிகளில் முகாமிட்டு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என 200 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவு இன்னும் வரவில்லை.

இந்த நிலையில் மாதிரி கொடுத்த மாணவர்களின் செல்போன் எண்களுக்கு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளதால் வெளியே செல்லக்கூடாது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவ-மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.கொரோனா பரவலை தடுக்க பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக 2 அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News