செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட கஞ்சா பாக்கெட்டுகளை படத்தில் காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2021-02-24 02:19 GMT   |   Update On 2021-02-24 03:32 GMT
கனடாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து இருந்து 3 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில், விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையில் உள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக 3 பார்சல்களில் மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதில், 3 பார்சல்களிலும் தலா 100 கிராம் என 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் காய்ந்த இலைகள் இருந்தன. இதையடுத்து, இவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில், பார்சலில் இருந்த இலைகள் உயர்ரக கஞ்சா என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பார்சல்களில் இருந்த முகவரிகளுக்கு சென்று விசாரித்த போது, அந்த முகவரியில் யாரும் இல்லாததால் அவை போலியானது என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை சென்னைக்கு அனுப்பி வைத்தது யார்? இந்த கடத்தல் சம்பவத்தில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News