செய்திகள்
திருமாவளவன்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பா.ஜ.க.வின் அரசியல் அநாகரிக செயல்- திருமாவளவன் கண்டனம்

Published On 2021-02-22 11:10 GMT   |   Update On 2021-02-22 11:10 GMT
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வின் இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:பா.ஜனதா ஏற்கனவே கர்நாடகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு செய்வது போன்ற அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வருகிறது.

அதேபோல தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து உள்ளது.

இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரியில் ஒத்திகை பார்க்கிறது. தமிழ்நாட்டிலும் இதேபோன்ற அநாகரிக செயலை நடத்தி எதிர்காலத்தில் காலூன்ற துடிக்கிறது. அரசியல் அரங்கில் இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை இதற்கு முன்னர் எந்த அரசியல் கட்சியும் செய்தது இல்லை.

ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவின் இப்போக்கை கண்டிக்க வேண்டியது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது அவசியமாகும்.

கே: அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

ப: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. வைத்துள்ள கூட்டணி அ.தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது அ.தி.மு.க. தலைமைக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஊழல், முறைகேடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க., பா.ஜ.க.வை பகைத்துக் கொள்ள இயலவில்லை. நனைந்து ஈரம் சுமக்கும் கதையாக அ.தி.மு.க., பா.ஜனதாவை சுமக்கிறது.

தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் வெற்றி பெற கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை கூட விலைக்கு வாங்கி அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்துவதற்கு தயங்கமாட்டார்கள்.

தமிழகத்தில் 2-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் ஆகும். அதற்காக அ.தி.மு.க.வை அழிப்பதற்கும் தயங்கமாட்டார்கள். இது அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கே:தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா?

ப: அதிகாரப்பூர்வமாக குழு அமைத்து பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடக்கவில்லை என்றாலும் தொகுதி பங்கீடு குறித்த கலந்துரையாடல் தொடங்கிவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவோம். சுமூகமான முறையில் தொகுதி பங்கீடு நடைபெறும்.பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புகின்றன. தி.மு.க. கூட்டணி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கே: விடுதலை சிறுத்தை சின்னம் தொடர்பாக என்ன முடிவு எடுத்து உள்ளது?

ப: சின்னம் குறித்து ஏற்கனவே விடுதலை சிறுத்தையின் நிலைப்பாடு குறித்து பலமுறை கருத்து சொல்லி இருக்கிறேன். தி.மு.க. தரப்பில் அது தொடர்பான சுதந்திரத்தில் தலையிடாது. எனவே சின்னம் தொடர்பான முடிவை விடுதலை சிறுத்தை சுதந்திரமாக எடுக்கும்.

கே: 5 சதவீத இடங்களில் போட்டியிட்டால் தான் தனி சின்னம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறதே?

ப: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக சின்னங்களை பெற விரும்பும் கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே 10 சதவீத இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற வரையறை இருந்ததது.

இப்போது அது 5 சதவீதமாக தளர்த்தப்பட்டுள்ளது. 5 சதவீதம் என்றால் குறைந்தது 12 இடங்களில் போட்டியிட வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சுயேச்சை வேட்பாளர்களை போல சின்னங்களை கேட்டு பெறலாம். பதிவு பெற்ற அரசியல் கட்சிகளுக்கும் அதில் முன்னுரிமை வழங்குவார்கள். சமூக ஊடகங்கள் வலிமை பெற்று இருக்கிற இந்த சூழலில் பல மாதங்களுக்கு முன்பே சின்னங்களை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கே: 3-வது அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான 2 அணிக்கு மாற்றாக 3, 4-வது அணிகள் உருவாவது உண்டு. அது தவிர்க்க முடியாது. ஆனாலும் இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான இரு அணிகளே தேர்தல் பலத்தில் முதன்மையானவையாக விளங்கும். மற்ற அணிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

கே: ரஜினி- கமல் சந்திப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: ரஜினியின் ஆதரவை கமல் கேட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் வெளிப்படையாக சந்திப்பு பற்றி எதுவும் கூறவில்லை. ரஜினிகாந்த் எந்த அணிக்கும் வெளிப்படையான ஆதரவை அறிவிக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News