செய்திகள்
சட்டசபையில் பேசிய முதல்வர் நாராயணசாமி

ஆட்சியை கவிழ்க்க சதி... புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு

Published On 2021-02-22 05:32 GMT   |   Update On 2021-02-22 06:07 GMT
4 ஆண்டுகளாக தங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-

மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். எவ்வளவு இன்னல் வந்தாலும் மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது. மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். முன்னாள் ஆளுநர் கிரண் பேடியும் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளார்கள். 

புதுச்சேரியை மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41 சதவீத வரி கொடுத்தார்கள். ஆனால் புதுச்சேரிக்கு 21 சதவீத வரி மட்டுமே கொடுத்தார்கள். சட்டமன்றம் உள்ள புதுச்சேரியும் டெல்லியும் நிதி கமிஷனில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றது. நாங்கள் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. இது துரோகம் இல்லையா? மத்திய அரசு செய்யும் துரோகத்தை எதிர்க்கட்சிகள் ஆதரித்தால், அது அவர்களை பாதிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News