செய்திகள்
குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை காணலாம்.

குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சுற்றி வந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

Published On 2021-02-19 09:17 GMT   |   Update On 2021-02-19 09:17 GMT
சேரம்பாடியில் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை காட்டு யானை சுற்றி வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, முண்டக்குன்னு, ஓவேலி, தோட்டமூலா உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதேபோல் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு வருகிறது.

இங்கு 3 பேரை கொன்ற காட்டு யானையை சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த யானையை பிடித்தபோது, ஒருசில காட்டு யானைகள் வனத்துறை யினரை துரத்தியது. பின்னர் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தற்போது அந்த காட்டு யானைகள் சேரம்பாடி பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சேரம்பாடி மில்லத் நகரில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்குள் திடீரென்று புகுந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள வீடுகளை சுற்றி வந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதுடன், கதவுகளை பூட்டிவிட்டு வீடுகளுக்குள் முடங்கினார்கள்.

பின்னர் அந்த காட்டு யானை அந்தப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானை பிடிபட்டதால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் தற்போது வேறு ஒரு யானை எங்கள் பகுதியில் முகாமிட்டு வீடுகளை சுற்றி வருகிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

அதுபோன்று 3 பேரை கொன்ற காட்டு யானையுடன் நின்ற மற்ற யானைகளும் தொடர்ந்து சேரம்பாடியை சுற்றி வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு இந்த காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News