செய்திகள்
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்த பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி (24) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி ஸ்ரீமதியின் நடத்தையில், அருள் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
அதேபோல் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், தனது கணவரிடம் கோபித்து கொண்டு, ஸ்ரீமதி தனது தாய் வீடான ராயக்கோட்டை பாஞ்சாலி நகருக்கு சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி அருள் மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அருள், தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதை தடுக்க வந்த ஸ்ரீமதியின் தங்கை உஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக அருளுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்தார். மேலும், மனைவியின் தங்கையான உஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்தும், இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.