செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க மின்னணு எந்திரங்களை செயல்படுத்த வேண்டும்- கவர்னர் வலியுறுத்தல்

Published On 2021-02-14 04:28 GMT   |   Update On 2021-02-14 04:28 GMT
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க மின்னணு எந்திரங்களை செயல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தினார்.
புதுச்சேரி:

புதுவையில் திருத்தப்பட்ட புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு ஏற்கனவே இருந்ததைவிட பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் போலீசார் கெடுபிடி செய்ததுடன் அதிரடியாக அபராதமும் வசூலிக்க தொடங்கினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து அபராத வசூலுக்கு தடை விதித்ததுடன் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளை நாராயணசாமி அறிவுறுத்தினார்.

இந்த சூழலில் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கவர்னர் கிரண்பேடி நேற்று ஆய்வு நடத்தினார். அவருடன் போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிறிஸ்னியா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ்குமார் பர்ன்வால், போக்குவரத்து துறை செயலாளர் அசோக்குமார், ஆணையர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது போக்குவரத்துத்துறை, போக்குவரத்து போலீசார் இடையே ஒருங்கிணைப்பு சரியில்லாததை குறிப்பிட்டு போக்குவரத்து மேலாண்மையில் அனைவரும் ஒங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து கவர்னர் விளக்கினார். அப்போது சில வி‌‌ஷயங்களை கையாளுமாறும் அறிவுறுத்தினார்.

குறிப்பாக அமலாக்க அதிகாரிகளிடமிருந்து அனைத்து விதமான தகவல்களையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க 16 மின்னணு எந்திரங்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

இந்த எந்திரங்களை கையாளுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் முறையான இணைப்புகளை உருவாக்க வேண்டும். லைசென்சுகளை தாமதமின்றி வழங்க வேண்டும். போக்குவரத்து போலீசாரிடம் உள்ள 9 மின்னணு எந்திரங்களையும் அபராதம் விதிக்க உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இதுபோன்ற விவரங்களை கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக வருகிற 20-ந்தேதி மீண்டும் போக்குவரத்துத் துறையில் மறுஆய்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
Tags:    

Similar News