செய்திகள்
சூளகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சூளகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கூலியம் கிராமத்தில் தேசன்னசாமி கோவில் உள்ளது. இந்த கோவில், புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கோவில் பூசாரியாக, சீனிவாசன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பூசாரி, கோவிலை திறக்க வந்தார். அப்போது, கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டு சற்று தூரத்தில் உண்டியலை வீசி சென்றது தெரியவந்தது. இது குறித்து, சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.