செய்திகள்
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் தடுத்தபோது எடுத்த படம்.

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை- பழங்குடியின மக்கள் 60 பேர் கைது

Published On 2021-02-13 12:31 GMT   |   Update On 2021-02-13 12:31 GMT
இலவச மனைப்பட்டா பெற தடையில்லா சான்று வழங்கக்கோரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பழங்குடியின மக்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் பெருமாள்புரத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மனைப்பட்டா பெற தடையில்லா சான்று வழங்கக்கோரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் நேற்று காலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே திரண்டனர்.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார், கொம்யூன் பஞ்சாயத்தை முற்றுகையிடாதபடி தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறிச்சென்று கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவின்போது தடுப்பு கட்டை சாய்ந்து விழுந்ததில் பெண் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
Tags:    

Similar News