செய்திகள்
சிறுத்தைப்புலி

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2021-02-13 12:21 IST   |   Update On 2021-02-13 12:21:00 IST
அந்தியூர் அருகே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படும் முன், கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் நிலையில், சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சாலைகளின் ஓரங்களில் அவ்வப்போது தென்படும் சிறுத்தை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனத்தை ஒட்டிய ஊருக்குள் நுழைந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள நல்லா கவுண்டன் கொட்டாய் பகுதியில் இரவு 9 மணி அளவில், வழக்கத்தைவிட நாய்கள் அதிக அளவில் குரைத்துள்ளது.

நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகர் ( 21) என்பவர், வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, நாய்கள் துரத்தியதில், திவாகரின் கண்ணெதிரில் சுமார் 3 மீட்டர் இடைவெளியில், மின்னல் வேகத்தில், சிறுத்தை ஒன்று ரோட்டை நான்கு கால் பாய்ச்சலில் கடந்தது. இதைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்த திவாகர், இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். மேலும் சிறுத்தையை 3 மீட்டர் இடைவெளியில் பார்த்த திவாகர், ஒருமணி நேரம் அச்சத்தில் இருந்து மீளவில்லை என கூறினார்.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கால்நடை மருத்துவர் அர்ஜூனன் என்பவரது வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிறுத்தை ரோட்டைக் கடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இதுவரை காட்டிலிருந்த சிறுத்தை முதன்முறையாக ஊருக்குள் நுழைந்து இருப்பது ஊர் பொது மக்களிடையேயும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையையேயும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படும் முன், கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News