செய்திகள்
கிருஷ்ணகிரியில் 9-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டம் - 50 பேர் கைது
கிருஷ்ணகிரியில், 9-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று 9-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மீன்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் தேவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பல்வேறு துறைகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட 27 பெண் ஊழியர்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.