செய்திகள்
காயம் அடைந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சின்ராயன்

எருது விடும் விழாவில் சிறுவன் காயம்: தாமதமாக வந்ததாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர் மீது தாக்குதல்

Published On 2021-02-04 16:31 GMT   |   Update On 2021-02-04 16:31 GMT
எருது விடும் விழாவில் காயம் அடைந்த சிறுவனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக கூறி, ஊழியரை தாக்கிய சிலர் வாகனத்தையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எருது விடும் விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் 53-ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. இந்த போட்டிக்காக வரட்டனப்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, சிந்தகம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.

இந்த போட்டியில் பங்கேற்ற காளைகளில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த வினாடியில் கடந்த காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் சில இளைஞர்கள் காளைகள் முட்டி காயம் அடைந்தனர். இதே போல் வரட்டனப்பள்ளி மேல் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 15) என்ற சிறுவனும் காயம் அடைந்தான். அவனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு அப்பகுதியில் சிலர் தகவல் தெரிவித்தனர். அந்த நேரம் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக அங்கிருந்த சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கினார்கள். இதில் பக்கவாட்டில் இருந்த வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் சின்ராயன் (40) என்பவரையும் சிலர் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஒரப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எருது விடும் விழாவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் தாக்கப்பட்டு, வாகனம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பர்கூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News