செய்திகள்
கொலை

கோவில் சுவரில் தலையை மோத செய்து என்எல்சி தொழிலாளி அடித்துக் கொலை

Published On 2021-02-03 06:16 GMT   |   Update On 2021-02-03 06:16 GMT
கோவில் சுவரில் தலையை மோத செய்து என்எல்சி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகங்கை (வயது 70).நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

சொரத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாமி தரிசனம் செய்வதற்காக சிவகங்கையும் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். ஆனால் சிவகங்கை கோவிலிலேயே படுத்து தூங்கினார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவர் கோவிலுக்கு வந்தார். அவர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மதுபோதையில் இருந்து முருகன் கோவிலில் தூங்கிய சிவகங்கையை எழுப்பி திட்டினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த முருகன் சிவகங்கையை பிடித்து கீழே தள்ளினார். பின்னர் சிவகங்கையின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் சிவகங்கையின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிவகங்கை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், நந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சிவகங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை கொலை செய்யப்பட்டு கோவிலில் பிணமாக கிடப்பது குறித்து அறிந்த பொது மக்கள் அந்த பகுதியில் திரண்டு நின்றனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முருகனும் ஒன்றும் தெரியாதது போல் அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.

முருகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் முருகன் குடிபோதையில் சிவகங்கையை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து முருகனிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News