செய்திகள்
நமச்சிவாயம்

நாராயணசாமியை எதிர்த்து போட்டியிட தயார்- நமச்சிவாயம் சவால்

Published On 2021-01-30 12:54 IST   |   Update On 2021-01-30 12:54:00 IST
நாராயணசாமியை எதிர்த்து போட்டியிட தயார் என்று பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் இருந்து நேற்று மாலை புதுவை வந்தார்.

மாநில எல்லையான கனகசெட்டிகுளத்தில் நமச்சிவாயத்திற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பிலும், அவரது ஆதரவாளர்கள் தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நமச்சிவாயம் காலாப்பட்டு விநாயகர் மற்றும் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கிருந்து ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு இருந்து பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு முதல் முறையாக சென்றார்.

அங்கு மாநிலத்தலைவர் சாமிநாதன், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் நிர்வாகிகள் நமச்சிவாயத்தை வரவேற்றனர். அதை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

பா.ஜனதாவில் இணைந்துள்ளது ஒரு தொடக்கம் தான். எங்களை போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பல பேர் பா.ஜனதாவில் இணைய தயாராக உள்ளனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி. இதுவே எங்களின் தாரக மந்திரம். மக்களை ஏமாற்றுவதே முதல்-அமைச்சரின் நாராயணசாமியின் தொழிலாக உள்ளது.

கிரண்பேடி அரசு திட்டங்களை தடுத்ததாகவும், மத்திய அரசு நிதி தரவில்லை என்றும் பொய் தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்புகிறார்.

பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்ததா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறைக்கு ரூ.250 கோடி மத்திய அரசு நிதி புதுவை மாநிலத்துக்கு வந்துள்ளது.

85 சதவீதம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என கூறும் முதல்-அமைச்சர் ஏதாவது ஒன்றை விரல்விட்டு கூறமுடியுமா?

புதுவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாமல் தங்கள் சுய நலத்திற்காக போராட்டக் களமாக மாற்றியதும், புதுவையை 20 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளியதும் தான் நாராயணசாமியின் சாதனை.

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தாமரை புதுவையில் மலரும். நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து நான் போட்டியிட தயார்

இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

Similar News