செய்திகள்
தங்க.விக்ரமன்

புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமன் நியமன எம்எல்ஏ- மத்திய அரசு அறிவிப்பு

Published On 2021-01-30 07:03 IST   |   Update On 2021-01-30 07:03:00 IST
புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம்.

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க.வை சேர்ந்த மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

இதை எதிர்த்து முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது மாநில அரசின் பரிந்துரைகளின் பேரில் தான் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் சட்டசபை நடவடிக்கையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் பா.ஜ.க. பொருளாளராக இருந்த சங்கர் எம்.எல்.ஏ. கடந்த 17-ந் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அவர் வகித்த நியமன எம்.எல்.ஏ. பதவியிடம் காலியானது.

அந்த இடத்துக்கு புதுவை மாநில பா.ஜ.க. துணைத்தலைவரான பாகூரை சேர்ந்த தங்க.விக்ரமனை நியமித்து மத்திய உள்துறை கூடுதல் செயலர் கோவிந்த் மோகன் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த ஆட்சிகாலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நியமன எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகி பா.ஜ.க.வில் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள் நியமன எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News