செய்திகள்
நீளம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் இலக்கை நோக்கி தாண்டியபோது எடுத்த படம்.

போலீஸ் உடல்தகுதி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்-இளம்பெண்கள்

Published On 2021-01-25 15:48 IST   |   Update On 2021-01-25 15:48:00 IST
போலீஸ் உடல்தகுதி தேர்வுக்கு இளைஞர்-இளம்பெண்கள் புதுக்கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 345 பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் அடுத்து உடல்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற எழுத்து தேர்வு எழுதியவர்கள் தயாராகி வருகின்றனர். புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வாலிபர்கள், இளம்பெண்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் 100-க்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், பந்து எறிதல் உள்ளிட்ட பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, அவர்களுக்குள் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பகலில் கொளுத்தும் வெயிலில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றனர். இதில் இளம்பெண்கள், வாலிபர்கள் நீளம் தாண்டினர். குறிப்பிட்ட அளவு வரை நீளம் தாண்ட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியாளர்கள் முத்துராமலிங்கம், கந்தசாமி உள்ளிட்டோர் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். போலீஸ் தேர்வு எழுதிய புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை மதனிகாவும் (வயது21) இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறுகையில், 'நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளேன். கடந்த முறை நடந்த போலீஸ் தேர்வில் பங்கேற்றபோது எழுத்து தேர்வில் தோல்வியடைந்தேன். 2-வதாக தற்போது போலீஸ் தேர்வு எழுதி உள்ளேன். இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற பயிற்சி எடுக்கிறேன்' என்றார்.

எழுத்து தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன்பின் உடற்தகுதி தேர்வு நடைபெறும் நாள் அறிவிக்கப்படும். புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சி பெறும் வாலிபர்கள், இளம்பெண்கள் அனைவரும் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதில் பெரும்பாலானோர் ஷு அணியாமல் வெறும் காலில் பயிற்சி பெறுகின்றனர். போலீசாக வேண்டும் என்ற லட்சியத்தில் அவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் திருமணமான ஒரு சில பெண்களும் உள்ளனர்.

Similar News