செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் நாளை மறுநாள் டிராக்டர் பேரணி- விவசாய சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

Published On 2021-01-24 03:31 GMT   |   Update On 2021-01-24 03:31 GMT
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக புதுவையில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணி நடத்த போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செல்வகணபதி, ராமமூர்த்தி, பத்மநாபன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி 1½ கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 60 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். 143 விவசாயிகள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர். இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) குடியரசு தின விழாவின் போது டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய தினம் புதுவை, காரைக்காலில் விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளோம். அன்றைய தினம் கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் இருந்து மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவிற்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைக்கிறார்.

இந்த பேரணி பெரியார் சிலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்திசிலை, சிவாஜி சிலை, முத்தியால்பேட்டை, அஜந்தா சந்திப்பு, அண்ணாசிலை, புஸ்சி வீதி, கடற்கரை சாலை வழியாக காந்தி திடலை சென்றடைகிறது. இந்த பேரணிக்கு அரசியல் கட்சிகள், சமூக, ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News