செய்திகள்
கோப்புப்படம்

பேராசிரியை கொலை வழக்கில் திருநங்கை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2021-01-20 02:13 GMT   |   Update On 2021-01-20 02:13 GMT
பேராசிரியை கொலை வழக்கில் திருநங்கை உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 50), திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்து இருந்த 12 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை நாவக்கரை வீனஸ் நகரை சேர்ந்த திருநங்கையான ஜீவானந்தம் (57), திருவண்ணாமலை சோமவார குளத்தெரு வ.உ.சி. நகரை சேர்ந்த ஜெய் என்கிற கதிரவன் (42) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து கிருஷ்ணவேணியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி காயத்திரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், திருநங்கை ஜீவானந்தம் மற்றும் கதிரவனுக்கு 6 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர்களுக்கு தலா ரூ.23 ஆயிரம் அபராதமும், இதனை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து ஜீவானந்தம், கதிரவன் இருவரையும் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News