செய்திகள்
சோதுகுடி கிராமத்தில் பொதுமக்கள் மறியலில்ஈடுபட்டபோது எடுத்த படம்.

இளையான்குடி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2021-01-18 15:37 GMT   |   Update On 2021-01-18 15:37 GMT
இளையான்குடி அருகே கண்மாய்க்கு வரும் தண்ணீரை திருப்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள சோதுகுடியில் நேற்று பகல் 2 மணியளவில் திடீரென்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. அந்த பஸ்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் கோஷமிட்டனர்.

கிராம மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசாரும், இளையான்குடி தாசில்தார் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சோதுகுடி கண்மாய்க்கு வரும் தண்ணீரை கால்வாயில் மறித்து புதூர் ஊருணிக்கு திருப்பி விட்டதால் தங்கள் கண்மாய் நிரம்பவில்லை. எனவே தங்கள் கண்மாய் தண்ணீரை திருப்பி விட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் சோதுகுடி, புதூர், பூச்சியேந்தல் கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கண்மாய் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பதை கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இளையான்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News