செய்திகள்
சிவா எம்எல்ஏ

புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி- சிவா எம்எல்ஏ உறுதி

Published On 2021-01-16 13:05 GMT   |   Update On 2021-01-16 13:05 GMT
புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி என்று தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
புதுச்சேரி:

திருவள்ளுவர் தினவிழா புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுவையில் தி.மு.க.வின் நிலை குறித்து அறிந்துகொள்ள இந்த முறை எப்போதும் இல்லாத வகையில் தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைய நேரம் ஒதுக்கி கருத்துகளை முழுமையாக கேட்டார். கழக மேலிட பொறுப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி.யை நியமித்துள்ளார். அவர் வருகிற 18-ந்தேதி புதுவை வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.

பின்னர் காலாப்பட்டில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். அன்றைய தினம் கழகத்தினர் அண்ணா சிலைக்கு வந்து அங்கிருந்து ஊர்வலமாக காலாப்பட்டிற்கு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியில் இருந்து 300 வாகனங்களில் கட்சியினர் வந்து பங்கேற்க வேண்டும். குறைந்தது 10 ஆயிரம் பேரையாவது நாம் திரட்ட வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமைய உள்ளது. தி.மு.க.விடம் எந்த கட்சி வந்தாலும் தி.மு.க.தான் தலைமை தாங்கும். முன்பு நம்மைப்பற்றி நினைக்காதவர்கள்கூட தற்போது நம்மிடம் பேசி வருகின்றனர். தி.மு.க.வின் கூட்டணிக்காக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து அண்ணா அறிவாலய கதவை தட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்களின் எண்ணப்படி தி.மு.க.வும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. புதுச்சேரியிலும் 100 சதவீதம் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை தாண்டி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத்தான் ஆட்சி அதிகாரத்தில் முழு உரிமை இருக்கவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. 2 மாதத்தில் புதுவையில் புதிய ஆட்சி அமையும். அதன்பிறகு மாநிலத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
Tags:    

Similar News