செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்

Published On 2021-01-16 05:25 GMT   |   Update On 2021-01-16 05:29 GMT
1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

1.75 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் பயனடையும் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆயு‌‌ஷ்மான் பாரத் என்ற புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் (சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள்) பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் காப்பீட்டுக்கான பிரீமியத்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் செலுத்துகிறது. இதன்படி புதுவையில் உள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளன. இதற்கான ஒப்புதலை கவர்னர் கிரண்பேடி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கவர்னரின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் முதன்மை திட்டமான ஆயு‌‌ஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன ஆரோக்கியா யோஜனா திட்டத்தின்கீழ் ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஒருங்கிணைக்க ஒப்புதல் அளித்துள்ளார். புதியதாக ஒன்று சேர்க்கப்பட்ட திட்டத்தின்படி புதுவை யூனியன் பிரதேசத்தின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் இப்போது ரொக்கமில்லா சிறப்பு சிகிச்சை (வருடத்துக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை) பெற முடியும்.

தனியார் மருத்துவமனைகளில் சிவப்பு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை சமர்ப்பித்தால் அரசு நேரடியாக மருத்துவமனை செலவை செலுத்த முடியும். தற்போது யூனியன் பிரதேச திட்டத்தின்கீழ் நோயாளிகள் ரூ.3.25 லட்சம் வரை மட்டுமே பெற முடியும். அதுவும் திருப்பி செலுத்துதல் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (அதாவது நோயாளிகள் மருத்துவமனை கட்டணங்களை செலுத்தி அதன்பின்னர் பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிக்க வேண்டும்).

பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஆயு‌‌ஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 1.75 லட்சம் ேரஷன் கார்டு தாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஆயு‌‌ஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு செய்யும் கோப்பினை முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி உள்ளார். இந்த கோப்பிற்கும் அவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

ஆனால் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் மஞ்சள்கார்டுதாரர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அவ்வாறு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தால் சுமார் 1.75 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
Tags:    

Similar News