செய்திகள்
தொட்டஹப்பா பண்டிகையையொட்டி ஒரு மாட்டுக்கு உப்புநீர் வழங்கப்பட்ட காட்சி.

எடக்காடு கிராமத்தில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை கொண்டாட்டம்

Published On 2021-01-12 10:32 GMT   |   Update On 2021-01-12 10:32 GMT
எடக்காடு கிராமத்தில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவால் புல்வெளிகள் கருகி தீவன தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதையொட்டி மாடுகளை கோவிலுக்கு அழைத்து சென்று, உப்பு நீர் வழங்கி, அவைகளின் கால்களில் காணிக்கை செலுத்தி வணங்குவார்கள். பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பணியாரங்கள், கோதுமை தோசைகளை(பொத்திட்டு) தீவனமாக வழங்குவார்கள். இந்த நிகழ்விற்கு ‘தொட்டஹப்பா’ பண்டிகை என்று பெயர்.

அதன்பின்னர் மாடுகளை தங்களது கிராமத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள எம்மட்டி(மாடுகள் மேய்க்கப்படும் இடம்) என்ற இடத்துக்கு அழைத்து செல்வார்கள். அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவார்கள். தொடர்ந்து ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய பிறகு மாடுகளை தங்களது கிராமங்களுக்கு அழைத்து வருவார்கள். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எடக்காடு கிராமத்தில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு தொட்டமனையில் இருந்து உப்பு எடுத்து மக்கள் ஊர்வலமாக வந்து, விநாயகர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அங்கு தோண்டப்பட்டு இருந்த குழிகளில் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றினர். பின்னர் மாடுகள் அழைத்து வரப்பட்டு, உப்பு நீர் வழங்கப்பட்டது. இதையடுத்து மாடுகளின் கால்களில் காணிக்கை செலுத்தி வணங்கினர்.

பின்னர் காலை 11 மணிக்கு எடக்காடு பஜாரில் ஊர் சின்ன கணிகெ தலைவர் பெள்ளி கவுடர் தலைமையில் பாரம்பரிய கில்லி விளையாட்டு நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு வீடுகளில் தயாரிக்கப்பட்ட பணியாரங்கள், கோதுமை தோசைகள் மாடுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News