செய்திகள்
தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் தகவல்
தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு புதுக்கோட்டை உள்பட 18 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருதய சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டு இதுவரை அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 31 பேருக்கு எவ்வித கட்டணமும் இன்றி ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 154 இடங்களில் ஸ்பூக்ஸ் சென்டர்களும், 18 இடங்களில் மெயின் சென்டர்களும் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் இருதய சிறப்பு சிகிச்சைக்கென ஒரு நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கிராமத்திலும் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் மேற்கண்ட நெட்வொர்க் மூலம் அருகில் உள்ள கேத்லாப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இதயம் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழகத்தில் மிகப் பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்கள் பறவை காய்ச்சல் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லையோரப் பகுதிகள் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். பறவை காய்ச்சல் நோய் குறித்து தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை.
கேரள மாநிலத்தில் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை இணைந்து நோய் தொற்றுள்ள பறவைகளை அழித்து வருகின்றனர். அதன் விவரம் கேட்கப்பட்டு வருகிறது. கோவை, தேனி போன்ற கேரள மாநில எல்லையிலிருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, 3 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தை தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த நடைமுறை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.