செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Published On 2021-01-08 08:16 IST   |   Update On 2021-01-08 08:16:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.
ஈரோடு:

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் மிக விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக கோவிஷூல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதைப்போல் கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்த கட்டமாக பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக கோவிஷூல்டு தடுப்பூசி டாக்டர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் என 6 லட்சம் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்தது. ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என கொரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம், ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள சுகாதார மையம் என 5 இடங்களில் நாளை (அதாவது இன்று) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒத்திகையின் போது பயனாளிகளை அடையாளம் காணுதல், அவர்கள் பற்றிய தரவுகளை கோ-வின் தளத்தில் பதிவு செய்தல், அடையாளம் காணப்பட்டவர்கள் ஒத்திகை நடைபெற்ற இடத்துக்கு வரவழைக்கப்படுதல் என எல்லா பணிகளும் நேர்த்தியாக நடத்தப்பட உள்ளன.

தடுப்பூசி போடும் பணியின்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும், பிற அம்சங்களும் கூட அடையாளம் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News