செய்திகள்
முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்ட போது எடுத்த படம்.

முத்தண்ணன் குளக்கரையில் 207 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2021-01-08 08:04 IST   |   Update On 2021-01-08 08:04:00 IST
கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 207 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கோவை:

கோவையில் உள்ள பூசாரிபாளையம் முத்தண்ணன் குளக்கரையில் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் ஏராளமானவர்கள் வசித்து வந்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதால் குளக்கரையில் வசிப்பவர்களை காலி செய்து, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து வீடுகளை காலி செய்யுமாறு அங்கு வசித்தவர்க ளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் அங்கு வசித்தவர்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், சத்தி சாலையில் உள்ள காபிக்கடை, கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கனும் வழங்கப்பட்டன.

இதனால் அங்கு வசித்த ஏராளமானவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு புதிய வீடுகளுக்கு சென்றனர். ஆனால் ஒருசிலர் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். மாநகராட்சி தரப்பில் பலமுறை கூறியும் வீடுகளை காலிசெய்ய வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் வீடுகளை காலிசெய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினர்.

Similar News