செய்திகள்
கேரளாவில் இருந்து வந்த வாகனத்துக்கு கிருமி நாசினி தெளித்தபோது எடுத்தபடம்.

தமிழக- கேரள எல்லைகளில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

Published On 2021-01-07 17:09 IST   |   Update On 2021-01-07 17:09:00 IST
தமிழக-கேரள எல்லைகளில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கூடலூர்:

கேரளா தொடங்கி வட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் தமிழக-கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் காடை, கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவையினங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டம் கூடலூர் - கேரள எல்லைகளில் போதிய கால்நடை டாக்டர்கள் இல்லாததால் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி உடனடியாக தொடங்கவில்லை.

இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்பட்டு நேற்று முதல் நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்பட 8 சோதனை சாவடிகளில் கால்நடை டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கேரளாவில் இருந்து வரும் சரக்கு மற்றும் தனியார் வாகனங்களை பதிவு செய்ததுடன், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளின் குறுக்கே கிருமி நாசினி பவுடர்களையும் தூவினர்.

அப்போது கேரளாவில் எந்த பகுதியில் இருந்து வருகிறது என பல்வேறு விசாரணை நடத்திய பின் தமிழகத்துக்குள் அனுமதித்தனர். இதேபோல் சரக்கு வாகனங்களின் மேல் ஏறிச்சென்று தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டுவரப்படுகின்றதா என சோதனை செய்தனர்.

இப்பணியை கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் பகத்சிங் கேரள எல்லைகளில் ஆய்வுசெய்தார். இதேபோல் கூடலூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கால்நடை டாக்டர் கோசலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

Similar News