செய்திகள்
தற்கொலை

மொடக்குறிச்சி அருகே ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

Published On 2021-01-07 15:11 IST   |   Update On 2021-01-07 15:11:00 IST
மொடக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சியை அடுத்த வெண்டிபாளையம் பகுதியில் பெண் பிணம் மிதப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், ‘நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தொண்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல். இவருடைய தாய் மணி (வயது 58). கடந்த 2-ந் தேதி மணிக்கும், செங்கோட்டு வேலுவின் மனைவிக்கும் தண்ணீர் பிடிப்பதில் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் மணி ஆத்திரம் அடைந்து மருமகளிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

நீண்ட நேரமாகியும் மணி வீடு திரும்பாததால், அவரை பல இடங்களிலும் செங்கோட்டுவேல் தேடினார். ஆனால் மணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் மணியை கண்டுபிடித்து தருமாறு திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதற்கிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற மணி, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், அவருடைய உடல் வெண்டிபாளையம் ஆற்றின் கரை பகுதியில் ஒதுங்கியதும்,’ தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News