செய்திகள்
கோத்தகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி
கோத்தகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 49), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். பெட்டட்டி அருகே உள்ள ஒரு குறுகிய வளைவில் மோட்டார் சைக்கிளை திரும்பும் போது, எதிர்பாராத விதமாக திடீரென சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி ஒன்று வந்ததால், நிலைதடுமாறி அவர் சாலையில் விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.