செய்திகள்
வேலை நிறுத்தம்

ஈரோட்டில் நாளை நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

Published On 2021-01-05 12:23 IST   |   Update On 2021-01-05 12:23:00 IST
ஈரோட்டில் நாளை நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஜவுளி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் இதை நம்பி உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் சரவணன் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாகவே பஞ்சு விலை அதிகபட்சமாக 10 சதவீதம் கூட உயரவில்லை. ஆனால் நூல் விலையானது 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

அடிக்கடி உயரும் நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை உயர்த்தி விற்கமுடியவில்லை. 40-ம் நம்பர் வார்ப் நூல் ஒரு கோன் கடந்த மாதம் ரூ.195 ஆக இருந்தது தற்போது ரூ.235 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ரக நூல் அதிகமாக உற்பத்தி செய்வதுடன் அவற்றை அதிகமாக ஏற்றுமதியும் செய்கின்றனர். பிற ரக நூலை தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்து செயற்கையான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நூல் விலை உயர்த்தப்பட வேண்டும்.

இதை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை ஒருநாள் ஈரோடு மாவட்டம் ஜவுளி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன் போன்றவை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மாவட்ட அளவில் 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News