செய்திகள்
சேரம்பாடி அருகே சிறுத்தைப்புலி மாட்டை அடித்து கொன்றது- பொதுமக்கள் பீதி
சேரம்பாடி அருகே சிறுத்தைப்புலி மாட்டை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதி அருகே இருப்பதால் சிறுத்தைப்புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகிறார். அந்த கால்நடைகள் அருகே உள்ள புல்வெளிக்கு சென்று மேய்ந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள புல்வெளிக்கு மேய சென்றன. அப்போது திடீரென்று வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தைப்புலி வெளியே வந்தது. பின்னர் அது அங்கு மேய்ந்து கொண்டு இருந்த ஒரு மாட்டை அடித்து கொன்றது.
இதனால் அங்கு மேய்ந்து கொண்டு இருந்த மற்ற கால்நடைகள் அலறின. இதை பார்த்த பொதுமக்கள் சத்தமிட்டபடி ஓடினார்கள். உடனே சிறுத்தைப்புலி அந்த மாட்டை அங்குவிட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைப்புலி அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அந்த சிறுத்தைப்புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்.