செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

கூடலூர் அருகே அத்திப்பாளியில் குடிநீர் தட்டுப்பாடு- கிராம மக்கள் அவதி

Published On 2021-01-03 05:41 GMT   |   Update On 2021-01-03 05:41 GMT
கூடலூர் அருகே அத்திப்பாளியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்:

கூடலூர் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. நகர பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கூடலூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பகுதியில் உள்ள தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழைகள் தொடர்ச்சியாக பெய்வதால், மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

ஆனால் கோடைகாலம் தொடங்கியவுடன் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விடுகிறது. எனினும் மக்களுக்கு தேவையான தண்ணீர் தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் கூடலூர் அருகே அத்திப்பாளி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மழைக்காலத்தில் வாரத்துக்கு ஒருமுறையும், கோடைகாலத்தில் 12 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் தற்போது குடிநீர் கிடைக்காமல், தட்டுப்பாட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம், குடிநீர் வினியோகத்தில் உள்ள குளறுபடிகள்தான் என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக குடிநீர் வழங்கல் பணியாளர்களிடம் முறையிட்டாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அத்திப்பாளி கிராம மக்கள் கூறியதாவது:-

மழைக்காலம் இன்னும் முழுமையாக முடியாத நிலையில் அத்திப்பாளி பகுதியில் குளறுபடிகள் காரணமாக மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இதனால் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. இனிவரும் மாதங்கள் கோடைகாலம் என்பதால் குடிநீர் வினியோகத்தை முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News