செய்திகள்
சிவகாசி அருகே டிரைவரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
சிவகாசி அருகே டிரைவரை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் துரைப்பாண்டி (வயது 31). இவர் பூலாவூரணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு வரும் மூலப்பொருட்களை அதே பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் முத்துராஜ், அழகர், நந்து, பாலமுருகன், அலெக்ஸ், மாயா, பாண்டி, சக்கையா, கார்த்தி, பாலமுருகன் ஆகியோர் இறக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சில பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து முத்துராஜ் உள்ளிட்ட 10 சுமை தூக்கும் தொழிலாளர்களை இனி நிறுவனத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதை சம்பந்தப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு துரைப்பாண்டி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 10 பேரும், துரைப்பாண்டியை நாரணாபுரம் முனீஸ்வரன் கோவில் அருகில் வழிமறித்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.