செய்திகள்
மசினகுடி-ஊட்டி சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்த காட்சி.

மசினகுடி-ஊட்டி சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2021-01-02 09:42 GMT   |   Update On 2021-01-02 09:42 GMT
மசினகுடி-ஊட்டி சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்:

மசினகுடி பகுதியில் ஒரு ஆண் காட்டுயானை காயத்துடன் சுற்றி வருகிறது. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது. அந்த காட்டுயானைக்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்காபுரம் பகுதியில் நின்றிருந்த அந்த காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

அப்போது காட்டுயானையின் முதுகில் காயம் பலமாக இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். பின்னர் காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காயம் குணமடையும் வரை காட்டுயானையை கண்காணித்து அவ்வப்போது சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த காட்டுயானை மசினகுடி, மாவனநல்லா, பொக்காபுரம், தொட்டிலிங் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் உலா வருகிறது.

மேலும் மசினகுடி -ஊட்டி சாலையில் வந்து நிற்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அந்த காட்டுயானையை சிங்காரா வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து விரட்டி வருகின்றனர். மேலும் அந்த காட்டுயானை தின்பதற்காக சுற்றுலா பயணிகள் சிலர் பழங்களை சாலையோரம் வீசி சென்றனர். இதை கண்ட வனத்துறையினர் அவர்களை எச்சரித்தனர்.
Tags:    

Similar News